மேஷம்
மேஷ ராசிநாதன் மாத பிற்பாதிவரை 10-ல் உச்சமாக இருக்கிறார். அவருடன் 5-க்குடைய சூரியனும், 2, 7-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை. தொழில், உத்தியோகம் இவற்றில் பிஸியாக இருக்கும் சூழ்நிலைகள் அமையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுப்பறி நிலை மாறி காரிய அனுகூலம் உண்டாகும். 11-ல் இருக்கும் சனி முன்னேற்றத்தையும் தருவார். மூத்த சகோதர பகையில் உதவி, ஒத்தாசையையும் உண்டாக்குவார். 21-ஆம் தேதிமுதல் கும்ப ராசியில் ஆறு கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. (சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி, புதன், ராகு). இதனால் சில சங்கடங்களும் சமூகத்தில் சில பாதிப்புகளும் ஏற்படலாம். சனி அங்கு ஆட்சி. குரு பார்வையும் கும்ப ராசிக்கு கிடைப்பதால் தனிப்பட்ட நபர்களுக்கிடையே சங்கடத்தைத் தவிர்த்தாலும் மேற்கூறிய கிரகச் சேர்க்கைகள் தீ விபத்து, வாகனவகையில் சங்கடம் போன்ற பலன்களை சமூகத்தில் ஏற்படும். உடல்நலத்தில் ஆரோக்கியக் குறைவு உண்டாகலாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சோமவார விரதத்தைக் கடைப்பிடிப்பதுடன் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாதத்தின் முதல் வாரத்தில் 10-ஆமிடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். எனவே தொழில் வளம் பெறும். உத்தியோகத்திலும் உயர்வு எதிர்பார்க்கலாம். வாகனம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். 11-க்குடைய குரு வக்ரகதியில் 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் வக்ரத்தில் உக்ரபலம் காணப்படும். ஒருசிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். ஒருசிலருக்கு இடமாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் ஏற்படலாம். 12-க்குடைய செவ்வாய் உச்சம் பெறுவதால் விரயத்தைத் தவிர்க்க இயலாது. மாதக் கடைசியில் கும்பத்தில் மாறி குருவின் பார்வையைப் பெறுவதால் தொழிலில் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். 8-ஆமிடத்தை குரு பார்ப்பதால் ஒருசில நேரம் இனம் புரியாத கவலை அல்லது குடும்பத்தைவிட்டு பிரிந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் சங்கடம் இவையெல்லாம் மனதை வாட்டும். எல்லா சௌகரியங்கள் இருந்தும் தனி ஆளாக உணரும் நிலையும் வெளிப்படும். திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்கு 2-ல் இருக்கும் குரு திருமண யோகத்தையும் குடும்ப பாக்கியத்தையும் தருவார். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் தேடிவரும். வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு சிந்தது.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணமாக இருக்கிறார். ஜென்மத்திலுள்ள வக்ர குரு ராசிநாதனைப் பார்க்கிறார். பொதுவாக ராசிக்கோ ராசிநாதனுக்கோ அல்லது லக்னத்திற்கோ லக்னநாதனுக்கோ குருபார்வை கிடைப்பது சிறப்பு. மாமன்- மைத்துனர்களிடையே இருந்த மனக்கிலேசங்கள் விலகி ஒற்றுமையுணர்வு உண்டாகும். மாத மத்தியில் 3-க்குடையவரை (சூரியன்) குரு பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் அரசு ஊழியர்களுக்கு காரிய அனுகூலமும் உண்டாகும். சகோதர- சகோதரிகளிடம் நிலவிய பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஒரு தீர்வுக்கு வரும். அது சாதகமான வகையில் அமையும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். அல்லது சீர் செய்யலாம். 12-க்குடைய சுக்கிரனும் 9-ஆமிடமான கும்பத்தில் வருவதால் ஒருசிலருக்கு தொழில், உத்தியோகம் சார்ந்த இடமாற்றம் அல்லது ஊர்மாற்றம் ஏற்படலாம். அதேசமயம் உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு ஜென்மத்திலுள்ள வக்ர குரு அதை நிறைவேற்றி வைப்பார். தேக ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. 11-க்குடையவர் 8-ல் மறைந் தாலும் உச்சம்பெற்று 11-ஆமிடத்தையே பார்ப்பதால் கடைசி நேரத்தில் காரிய பூர்த்தி உண்டாகும். தன்வந்திரி பகவானை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு அட்டமத்துச் சனியின் கடைசிக்கூறு நடைபெறுகிறது. 12-ல் உள்ள குரு 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் பல பேர் விபத்து, நோய், கவலை போன்றவற்றை சந்தித்தார்கள். சில பேர் பொருளாதாரப் பற்றாக்குறையும் சந்தித்தனர். 12-ல் உள்ள வக்ர குரு சேமிப்புக்கு இடமில்லாத வகையில் விரய பலன்களை உண்டாக்குவார். எவ்வளவு உழைத்தாலும் ஊதியப் பிரச்சினை அல்லது ஊதியம் வந்தால் செலவுகளை சமாளிக்க முடியாத நிலை இவற்றால் அவதிப்பட நேரும். அதிலும் சந்திர தசை சந்தி புக்தி நடப்பவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். என்றாலும் 10-க்குடைய செவ்வாய் உச்சம்பெற்று ராசியைப் பார்ப்பதால் உத்தியோகம் தொய்வில்லாமல் நடைபெறும். தொழில்துறையிலும் பிரச்சினைகளை சமாளிக்கும் யுக்தி பிறக்கும். 12-க்குடைய புதன் 8-ல் மறைவது நன்மைதான். ஒருசில விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். புதிய பொறுப்புகளும் வந்துசேரும். அட்டமத்துச்சனி காலத்தில் குடியிருப்பு மாறாமல் இருந்தவர்களுக்கு இக்காலம் குடியிருப்பு மாற்றம் நிகழும். நோய் நொடியில் இருந்தவர்களுக்கு நிவர்த்தி ஏற்படும். உங்களுக்கு இடையூறு செய்த நபர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை காலபைரவரை வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாதத் தொடக்கத்தில் 6-ல் மறைவு. அவருடன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை. உறவுகளில் சங்கடம் ஏற்படலாம். எனினும் செவ்வாய் அங்கு உச்சம் பெறுவதால் பிரிவு, பிளவு ஏற்படாது. ஆனால் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு. 11-ஆமிடத்திலுள்ள வக்ரகுரு 5, 8-க்குடையவர். எனவே சில நேரம் பிள்ளைகள் வகையில் பிரச்சினைகளைச் சந்திக்கலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மனதை வருத்தமடையச் செய்யும். என்றாலும் 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால், "புயலுக்குப் பின் அமைதி' என்பதுபோல பிரச்சினைக்கு பின் தீர்வு. அதுவும் சுமூகமானதாக அமையும். அவ்வப்போது வீண் மனக்கவலை தோன்றினாலும் அதைப்பற்றிய அச்சம் தேவையில்லை. சில காரியங்கள் தாமதமாக நிகழ்ந்தாலும் நல்லவிதமாக நடைபெறும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண பாக்கியத்தைத் தருவார். 7-ஆம் தேதிமுதல் 10-க்குடைய சுக்கிரனை குரு பார்ப்பதால் தொழில் துறையில் சில அனுகூலமான சூழல் காணப்படும். நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த காரியம் ஒன்று இதன்பின் நிறைவேறும். மாத பிற்பகுதியில் 2, 11-க்குடைய புதன் வக்ரம். பொருளாதாரம் சற்று சுமாராக செயல்படும். புதன்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. புதன் மறைந்தாலும் குரு புதன் வீட்டில் இருந்து (மிதுனம்) புதனை பார்க்கிறார். புதன் 10-ஆமிடத்து அதிபதியும் ஆவார். தொழில் துறையில் முன்பிருந்த நிலையைவிட சிறிது முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் 10-ல் குரு வக்ரமல்லவா அவரது வேலையையும் அவர் காட்டத்தானே செய்வார்! சிப்பந்திகள் பிரச்சினை ஏற்படும். ஆக, "கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்ற பழமொழிப்படி தொழில் நன்றாக இருந்தால் சிப்பந்திக்கள் பிரச்சினை, சிப்பந்திகள் இருந்தால் தொழில் பிரச்சினை போன்றவற்றை சந்திக்கும் நிலை. எனினும் 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு பொருளாதாரப் பிரச்சினைகளை சரிசெய்வார். ராசிநாதனைப் பார்க்கும் குரு மதிப்பு, மரியாதை கெடாமல் பார்த்துக்கொள்வார். வக்ரநிவர்த்திக்குப்பின் குரு திருமண வாய்ப்பை உண்டு பண்ணுவார். அதேசமயம் பூமி, வீடு வாங்கும் யோகமும் அமையும். குடும்பத்தில் சில நேரம் கருத்து வேறுபாடு தோன்றும். அம்மாதிரி சமயங்களில் மௌனம் காப்பது சிறந்தது. வியாழக்கிழமை நவகிரகத்திலுள்ள குருபகவானை வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சாரம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் கவனிப்பது நல்லது. அவர்கள் வகையில் சில விரயம் ஏற்பட இடமுண்டு. கல்வி சம்பந்தமாகவோ அல்லது திருமண சம்பந்தமாகவோ அந்த விரயம் அமையலாம். குரு பார்வை ராசிக்கும் கிடைக்கிறது. ராசிநாதனுக்கும் கிடைக்கிறது. அது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் வக்ரகதியில் பார்வை கிடைப்பதால் பல காரியங்களை பூர்த்தியாகும் நிலைக்கு வந்து பின் தள்ளிப்போகும். அது உங்களது நம்பிக்கையை சோதிக்கும். உத்தியோகத்தினருக்கும் உயரதிகாரிகளால் பிரச்சினை. இவையெல்லாம் குருவின் வக்ரநிவர்த்திக்குப்பிறகு சரியாகும். மாத பிற்பாதியில் 12-க்குடைய புதன் வக்ரமடைகிறார் (பிப்ரவரி 20). அக்காலகட்டம் பொருளாதாரத்தில் ஒருசில அனுகூலம் காணப்படும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பங்கு பாகங்கள் பிரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதை சற்று ஒத்திப் போடுவது நல்லது. குருபெயர்ச்சிக்குப்பிறகு காரிய சித்தி உண்டாகும். யாருக்கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்டாம். விழுப்புரம் அருகில் பரிக்கல் சென்று லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். பொதுவாக செவ்வாய்க்கும் சனிக்கும் ஆகாது என்பது ஜோதிடவிதி! இங்கு சனி வீட்டில் செவ்வாய் உச்சம் பெறுவதால் 3-ஆமிடத்து மறைவு தோஷம் பாதிக்காது. தவிர சகோதரவகையில் நன்மையும் உதவியும் ஏற்படும். 5-க்குடையவர் வக்ரம் 8-ல் மறைவு. எனவே பிள்ளைகள் சார்ந்த நிம்மதி இருக்காது. அவர்களின் செயல்பாடு மனது மற்றும் சமூகம் சார்ந்த வகையில் கவலை அளிக்கும். அவர்கள் ஏற்படுத்திய காயத்திற்கு மருந்தாக மனதை தொழில், ஆன்மிகம் போன்றவழியில் செலுத்துவது நல்லது. மாறாக தனி மனித ஒழுக்கம் மீறவேண்டாம். 2-க்குடையவர் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனவரவுக்கு இடமுண்டு. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை உண்டாகும். தாயாருக்கு தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அல்லது தாயாருடன் மனக்கிலேசம் ஏற்படலாம். 13-ஆம் தேதிமுதல் 10-க்குடையவர் 4-ல் நின்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழி-ல் கூடுதல் முன்னேற்றம், நல்ல வேலையாட்கள் அமைவது போன்ற நன்மைகள் உண்டாகும். செவ்வாய்க்கிழமை முருகனின் வேலுக்கு பாலாபிஷேகம் செய்யவும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 7-ல் வக்ரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். இதனால் உங்களுடைய செயல்பாடுகள், அணுகுமுறைகள் முன்னுக்குப்பின் முரணாக அமையும். பழகிய வட்டாரம் மற்றும் உறவினர்களிடையே சங்கடத்தை சந்திக்கலாம். "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற சொல் மொழிக்கு ஏற்பட உங்கள் காரியங்களுக்கு நீங்களே நியாயம் காட்டுவீர்கள். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தைரியம், தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார். குரு வக்ரம் தெளிந்தபின் தொட்ட காரியம் துலங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். 10-க்குடைய புதன் 3-ல் குருவின் பார்வையைப் பெறுகிறார். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அதனுடன் அந்தஸ்தும் உயரும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். குரு 4-க்குடையவர் என்பதால் வீட்டை பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும். பழுது பார்த்து சீர் செய்யலாம். புதிய வீடு வாங்கும் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும். மதுரை, பொன்னமராவதிமுதல் புதுக்கோட்டை பாதையில் செவலூர் பூமிநாத சுவாமியை வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 2-ல் சனி ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடைபெறுகிறது. 2-ல் உள்ள சனி சில நேரம் உங்கள் பேச்சில் அமிலத்தைக் கக்குவதுபோல் செய்வார். வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பது ஜோதிட மொழி! எனவே பேச்சில் நிதானம் தேவை! 6-ல் உள்ள வக்ரகுரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் அலைச்சல், அலைக்கழித்தல், இடமாற்றம், வீண் விரயம் போன்ற அனுபவங்களைத் தருவார். எனினும் விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றின்மூலம் காரிய நிறைவேற்றத்தை சந்திக்கலாம். 10-க்குடைய சுக்கிரனை குரு பார்ப்பதால் மனைவிவழியிலும் தொழி-ல் உதவி, ஒத்தாசை கிடைக்கும். உத்தியோகத்திலும் ஆதரவு உண்டாகும். உடல்நிலையில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும் மருத்துவ உதவியுடன் அவற்றை ஜெயிக்கலாம். கடைசிக்கூறு சனி மகர ராசிக்காரர்களை உண்டா? இல்லையா என்று ஒரு வழிபடுத்தி விடுவார். சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழும் சூழ்நிலையை எதிர்கொள்ளலாம். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீப வழிபாடு சிறப்பு.
கும்பம்
கும்ப ராசிக்கு வக்ர குருவின் பார்வை கிடைப்பதால் உத்தியோகம், தொழில், குடும்பம் இவற்றில் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமாறு சில விஷயங்கள் நிகழலாம். என்றாலும் சனி ராசியில் ஆட்சி. அது ஒரு சாதகம். ஜென்மச்சனி முடிந்து பாதச் சனி ஆரம்பமாகும் காலம். "பேரு பெத்த பேரு தாகத்துக்கு நீலு லேது' என்ற நிலைமாறும். 10-க்குடைய செவ்வாய் 12-ல் உச்சம் பெற்றதால் தொழில்துறையில் விரயம் ஏற்பட்டாலும் அது முதலீட்டு விரயமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர்மாற்றம் ஏற்படும். அல்லது குடியிருப்பு வகையில் இடமாற்றம் உண்டாகும். 9-க்குடைய சுக்கிரனும், 10-க்குடைய செவ்வாயும் மாத பிற்பாதியில் ராசியில் ஒன்றுகூடி இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அக்கால கட்டம் வாழ்க்கை, தொழில் இரண்டிலும் நன்மதிப்பு ஏற்படும். பொருளாதாரநிலை மேம்படும். 4-க்குடைய வரை குரு பார்ப்பதால் வங்கிக்கடன்மூலம் வாகனம் அல்லது மனை வாங்கும் யோகம் அமையும். அல்லது தனியார் கடனும் அமையலாம். சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு நெய் தீபமேற்றவும். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் வழிபாடு நல்லது.
மீனம்
மீன ராசிநாதன் குரு 4-ல் வக்ரம். கேந்திரம். உடல்நலத்தில் அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்து விலகும். மேலும் கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் தொல்லை தரலாம். 10-க்குடையவர் 4-ல் வக்ரம் பெற்று 10-ஆமிடத்தையே பார்ப்பதால் தொழில் ஓட்டங்கள் தடைப்படாது. எனினும் ஏழரைச்சனியால் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சில நேரம் வரவைவிட செலவு அதிகமாகக் காணலாம். அதற்கு கை மாற்றுக்கடன் வாங்க நேரிடும். கணவன்- மனைவிக்குள்ளும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் சங்கடத்திற்கு இடம் ஏற்படாது. 4-க்குடைய புதன் விரயத்தில் இருப்பதால் வாகனவகையில் அடிக்கடி பழுது செலவு உண்டாகும். அல்லது பூமி, மனை வாங்கும் யோகம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் நிதானமும் பொறுமையும் அவசியம். குரு வக்ரநிவர்த்திக்குப்பிறகு திருமண முயற்சிகள் கைகூடும். 6-க்குடையவர் 12-ல் மறைவதால் எதிர்த் தொல்லைகள் இருக்காது. சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றவும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/monthrasi-2026-01-30-12-52-18.jpg)